தமிழ்நாட்டிலுள்ள பறவை ஆர்வலர்கள் அவ்வவ்போது தாங்கள் கண்ட பட்சிகளைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதுடன் இத்துறை சார்ந்த தகவல்களைப் பரி மாறிக் கொள்கிறார்கள். அண்மையில் தெருவோரம் கீழே விழுந்து கிடந்த ஒரு குயில் குஞ்சு ஒன்றை எடுத்து வீட்டிற்குக் கொண்டு வந்த ஒருவர் அதற்கு என்ன இரை கொடுக்க வேண்டும், எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று மின்னஞ்சலில் கேள்வி எழுப்பினார். பறவை ஒன்றைக் காப்பாற்றும் அவரது முயற்சியை சிலாகித்துப் பலர் பதில் எழுத ஆரம்பித்தனர். அதன் நடுவே, சின்னஞ்சிறு உயிரியலாளர் ரவி செல்லம் ஒரு குருவியைப் பற்றி நாம் கவலைப்படுவதைவிட, உயிரினங்களைப் பற்றி (species) அக்கறை காட்ட வேண்டும் என்றும், நம்து நேரமும் சக்தியும் சுற்றுச் சூழலைப் பராமரிப்பதில் இருக்க வேண்டும் என்றும் எழுதினார். கூட்டிலிருந்து விழுந்து இறப்பது இயற்கையுடன் கூடிய ஒரு நிகழ்வே என்ற அவர் கூற்றிற்கு பலத்த எதிர்வினை கிளம்பியது. கருணை, ஈரம், இரக்கம், ஈவு, பச்சாத்தாபம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து சிறிது நாட்கள் அந்த யாஹூ குழுவில் நடந்த விவாதம் காட்டுயிர் பராமரிப்பு (conservation) நம் நாட்டில் சற்று திசைமாறிப் போய்க்கொண்டிருப்பதைக் கோடிட்டுக் காட்டியது. எழுபதுகளில் அமெரிக்காவில் உருவான விலங்குரிமை (Animal Rights) இயக்கம் வேகமாக வளர ஆரம்பித்தது. பண்ணையில் வேலை செய்யும் கால்நடைகளையும், கறிக்காக வளர்க்கப்படும் கோழிகளையும், சர்க்கஸ் விலங்குகளையும், உயிர்க் காட்சி சாலைகளிலுள்ள விலங்குகளையும், பந்தயக் குதிரைகளையும் நல்லபடி பராமரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பித்த இந்த இயக்கம், நிறுவ உருப்பெற்று எண்பதுகளில் இந்தியாவிற்குள் வந்து சில நகரங்களில் கிளைகள் தோன்றின. மருத்துவப் பரிசோதனைக்காக வளர்க்கப்படும் விலங்குகள், முக்கியமாக குரங்கினம்மேல் இதன் கவனம் சென்று பல நல்ல பயன்கள் கிடைத்தன. 1977இல் இந்தியாவிலிருந்து குரங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது. அழகு சாதனம் தயாரிப்பில் விலங்குகள் பயன்படுத்தப்படக்கூடாது என்ற தடைச் சட்டம் பல நாடுகளில் வர இந்த இயக்கங்கள் வழிகோலின. செல்லப் பிராணிகள் பரிவுடன் பேணப்படுகின்றனவா என்றும் திரைப்படங்களில் தோன்றும் குதிரை போன்ற விலங்குகள் படப்பிடிப்பின்போது துன்புறுத்தப்படுகின்றனவா என்றும் இவை கண்காணிக்க ஆரம்பித்தன.
இந்த விலங்குரிமை இயக்கம் தோன்றும் முன்னரே, சென்ற நூற்றாண்டு பிரிட்டனில் ஆரம்பித்த பிராணி நலன் (Animal Welfare) கருத்தாக்கம் 1824ல் மிருகவதை தடுப்புசங்கமாக (Society for the Prevention of Cruelty of Animals) நிறுவனமாக உருப்பெற்றபோது அதன் முதல் நோக்கம் சாரட்டில் பூட்டிய குதிரைகளின் நலன்தான். பின்னர் இதன் தளம் மற்ற விலங்குகளுக்கும் விரிவடைந்து, இந்தக் கருத்தாக்கம் காலனிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு சட்டமாக உருப்பெற்று அதைச் செயல்படுத்த இன்ஸ்பெக்டர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். வண்டியிலும், ஏரிலும், செக்கிலும் பூட்டும் மாடுகள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிப்பதே இவர்கள் வேலை. மாட்டின் கழுத்தில் நுகம் அழுந்தி புண் உண்டாகி உள்ளதா என்று பரிசோதித்துப் பார்ப்பதை இவர்கள் முக்கிய பணியாகச் செய்ததால் மக்களிடையே இவருக்கு ‘புண்கழுத்து இன்ஸ்பெக்டர்’ என்று பெயர்.
அடையார் பிரம்ம ஞானசபையின் பாதிப்பில் வளர்ந்த ருக்மணி அருண்டேலுக்கு பிராணிநலனில் ஆழ்ந்த அக்கறை இருந்தது. அவருடைய முயற்சிகளின் பயனாக இந்தக் கருத்தாக்கம் இந்தியாவில் பரவி, அரசின் சார்பில் 1962இல் பிராணிநல வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியம் இன்று மத்திய சுற்றுச்சூழல் துறையில் ஒரு அங்கமாக சென்னையில் இயங்கி வருகின்றது. விலங்குகளின், அதிலும் கால்நடைகளின் நலனில் அக்கறை காட்டி செயல்படுபவருக்கு ‘பிராணி மித்ர’ என்ற விருதை இந்த வாரியம் வழங்குகின்றது. தமிழ்நாட்டில் இவ்விருதைப் பெற்ற ஜீவபந்து ஸ்ரீபால் பிராணிகள் நலனுக்காக உழைத்தவர்.. சௌகார்பேட்டையில் வசித்த இவர், உழைக்கும் கால்நடைகளுக்காகவும், மிருகபலியை எதிர்த்தும் வேலை செய்தார். சமண சமயத்தை சார்ந்த ஸ்ரீபால் ‘பொறி வாயில் ஐந்தவித்தான் யார்?’, ‘இளங் கோவடிகள் சமயம் யாது?’ போன்ற முக்கியான நூல்களை எழுதியுள்ளார்.
ஆனால் இதே காலகட்டத்தில் தெருவில் திரியும் நாய்களையும் பன்றிகளையும் பிடித்துக் கொல்ல The Destruction of Stray pigs, Stray dogs and Monkeys Act 1919 என்று ஒரு சட்டமும் அமலில் இருந்தது. ஒவ்வொரு முனிசிபல் அலுவலகத்திலும் தரையில் ஒரு தொட்டிபோல ஒரு Gas Chamber கட்டப்பட்டிருந்தது. ஆகவே அந்த அந்தக் காலகட்டத்தில் தெருநாய்கள் மக்களுக்கு ஒரு பிரச்சினையாக உருவாகியிருக்கவில்லை. நாய்களைப் பிடிப்பதற்காக ஆட்கள் பணிசெய்தனர். கோவாவில், பனாஜி நகரில் நகரசபை அலுவலர் ஒருவர், தினமும் ஒரு .22 ரைஃபிளுடன் ரோந்து சுற்றி வருவார். இவரது வேலை தெரு நாய்களைக் கண்டால் சுடுவது. இந்த சட்டம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் கிடப்பில் போடப்பட்டது. அண்மையில் 6.9.10 இந்து நாளி தழில் பெல்ஜியத்தில் பூனைகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கட்டுரை வந்துள்ளது. தானாகச் சுற்றிக்கொண்டிருந்த 13000 பூனைகள் அரசால் அழிக்கப்பட்டன. செல்லப்பிராணியாய் Gas chamber கட்டப்பட்டிருந்தது. ஆகவே வளர்க்கப்படும் மீதி பூனைகள் கட்டாயமாக கருத்தடை செய்யப்பட வேண்டும் என்ற விதியை அமல்படுத்தியிருக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்நாட்டின் பிராணிநல சங்கங்கள் இதை வரவேற்றிருக்கின்றன. காட்டுயிர் பற்றிய கரிசனை சுற்றுச் சூழல் இயக்கத்தின் விளைவாக எழுபதுகளில்தான் உருவானது. 1971இல் தோன்றிய பெட்ரோல் தட்டுப்பாடு, எண்ணெய் விலை விஷம் போல் ஏறியது, இதைத் தொடர்ந்து ஸ்டோக்ஹோம் நகரில் 1972இல் நடந்த சுற்றுச்சூழல் பன்னாட்டு மாநாடு, இவைதான் சுற்றுச் சூழல் இயக்கத்தின் ஆரம்பமாக சுட்டிக் காட்டப்படுகின்றன. காடுகளைப் பேண வேண்டியதின் முக்கியத்துவமும் காட்டுயிர் பாதுகாப்பின் அவசியமும் தேசத்தலைவர்களின் கவனத்தைப்பெற்றது. காட்டுயிர் பேணல் பற்றிய சட்டம் இயற்றப்பட்டது. வேட்டை நம் நாட்டில் அறவே தடை செய்யப்பட்டது.
1972இல் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1982இல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டன. இயற்கையிலுள்ள இணைப்புகள் பற்றிய ஒரு அறிவியல் புரிதல் ஏற்பட்டது. மத்திய அரசில் இந்த அக்கறையின் குறியீடு போல ஒரு புதிய துறை, சுற்றுச்சூழல் துறை மத்தியிலும் மாநிலங்களிலும் துவங்கப்பட்டது. காட்டுயிர் பராமரிப்பை முறையாகப் பயிற்றுவிக்க டேராடூனில் இந்தியக் காட்டுயிர் நிறுவனத்தை மத்திய அரசு தோற்றுவித்தது. பல இளம் உயிரியலாளர்கள் உருவாக்கப்பட்டு காட்டுயிர் பற்றிய புதிய புரிதல்களை அளித்தார்கள். (இந்த நிறுவனத்தில் படித்தவர்தான் சென்னையைச் சேர்ந்த ரவி செல்லம். கிர் காடுகளிலுள்ள சிங்கங்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.) விண்கோள் தொடர்பு, தானியங்கி காமிராக்கள், யானை போன்ற விலங்கையும் - சிகிச்சை அளிக்க, ரேடியோ பட்டை மாட்ட - செயலிழக்கச் செய்யக்கூடிய மயக்க மருந்து துப்பாக்கிகள் போன்ற புதிய தொழில் நுட்ப வசதிகள் காட்டுயிர்களின் உலகின் அருகில் நம்மைக் கொண்டு சென்றது. பல உண்மைகள் நமக்குப் புரிய ஆரம்பித்தது. ஒரு வேங்கை வாழ 40 சதுர கி.மீ. காடு தேவை என்றறிகிறோம். காட்டுயிர் பராமரிப்பு அறிவியல் தளத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. பல தன்னார்வக் குழுக்களுக்கும் இது தோன்றி காட்டுயிர் பேணலை ஊக்குவிக்கிறார்கள். இத்துறைக்கென சில இதழ்களும் தோன்றியிருக்கின்றன.
குயில் குஞ்சு பற்றிய இணையதள விவாதத்தில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு தனது இனப் பெருக்கத்தை நிலை நிறுத்தும் குயில், சென்னையில் எண்ணிக்கையில் மிகுந்து இருப்பதை ஒருவர் சுட்டிக் காட்டியிருந்தார். நகர்ப்புறங்களில் காக்கைகள் நிறைய இருந்து கூடுகள் கட்டுவதால், குயில்களுக்கும் முட்டையிட வேண்டுமான இடம் கிடைக்கின்றது. தமிழ்நாட்டில் குயிலோசை கேட்காத ஊரே இல்லையெனலாம் (ஆண் குயில் மட்டும்தான் கூவும்). இயற்கையில் குஞ்சுகள் இறப்பது சாதாரணமாக நடப்பது. இத்தகைய இழப்பிற்கு இயற்கை ஈடு கட்டிக்கொள்ளும்.
அகமதாபாதில் எங்கள் வீட்டுக்கு முன்புறம் இருந்த ஒரு விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் ஆள்காட்டிக்குருவி ஒன்று முட்டையிட்டு-இது தரையில்தான் முட்டையிடும் - நான்கு குஞ்சுகள் பொரித்தன. ஒரு மாதமாகத் தினமும் இந்தப் பறவைகளை நாங்கள் கவனித்தோம். கடைசியில் ஒரு குஞ்சுதான் எஞ்சி, முழு வளர்ச்சியடைந்து பறந்து போனது. கடலாமை போன்ற சில உயிரினங்கள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடுகின்றன. பிழைத்து முழு வளர்ச்சி அடைவது நான்கோ ஐந்தோதான். பொரித்து வெளிவந்தவுடன் தானாகவே கடலுக்குள் சென்று வாழ ஆரம்பிக்கும் இந்தச் சிறிய குஞ்சுகளை இரையாக்கிக் கொள்ள காத்திருக்கும் உயிரினங்கள் பல. அமெரிக்காவில் தொடங்கிய விலங்குரிமை இயக்கம் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளையும் மாடுகளையும் சரிவர நடத்துவதில் கவனம் செலுத்தியது. கோல்டி ஹான் போன்ற நட்சத்திரங்கள் ஆதரவு தந்ததால் இந்தக் கருத்தாக்கம் வேகமாகப் பரவியது.
நம் நாட்டிலும் சில நடிகைகள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்தனர். இந்த இயக்கத்தினர் ஜல்லிக் கட்டை எதிர்த்தனர். கிராமதேவதைகளின் கோவில்களில் நடக்கும் ஆடு, கோழி பலியையும் நிறுத்த வேண்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்தபோது இந்தக் கருத்தாக்கம் உருமாற்றம் பெற்று, வேறு ஒரு போக்கின் வெளிப்பாடாக இங்கு இயங்க ஆரம்பித்தது. சைவ உணவு அந்த இயக்கத்தின் முக்கிய பகுதியாகி அதன் சித்தாந்தமே மாற்றம் கொண்டது. நம் நாட்டில் சைவ உணவு என்பது ஒரு உணவுப் பழக்கம் மட்டுமல்லவே. அதைச்சுற்றி ஒரு அரசியலே இருக்கின்றது. மரக்கறி உணவு ஒரு சித்தாந்தத்தின் குறியீடாக இங்கு முன்னிறுத்தப்படுகின்றது.. விலங்குரிமை பற்றிப் பேசுவது ஒரு அடையாளமாக ஆகிவிட்டது.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் விலங்குரிமை, பிராணி நலன், காட்டுயிர் பராமரிப்பு இவைகளைப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றோம். சென்னையில் ஒரு முறை காட்டுயிர் ஆர்வலர்கள் கூட்டமொன்றில் நான் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு அங்கத்தினர், சைவ உணவின் மேன்மைகள் பற்றிய துண்டுப்பிரசுரம் ஒன்றை வினியோகித்துக் கொண்டிருந்தார். இம்மாதிரியான குழப்பம் மக்களைக் காட்டுயிர் பராமரிப்பு போன்ற கருதுகோள்களிலிருந்து அந்நியப்படுத்துகின்றது. அறிவியல் சார்ந்த செயல்பாடுகளின் மூலம்தான் காட்டுயிர் நல்ல விளைவுகளைக் காணமுடியும். இறைச்சிக்காக பிராணி நலன், விலங்குரிமை இயக்கத்தினரின் நடவடிக்கைகளைக் கவனித்த சலீம் அலி கவலையை 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The Fall of the Sparrow/1985 ) என்ற தனது சுயசரிதையில் கடைசி வரிகளாகப் பதிவு செய்தார்: “என்னைப் பொறுத்தவரையில் காட்டுயிர் பேணல் நடைமுறை நோக்கங்களைக் கொண்டது. அதாவது, பன்னாட்டளவில் ஒப்புக்கொண்டபடி, அறிவியல், கலாச்சார, அழகியல், பொழுதுபோக்கு, பொருளாதார காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. உணர்வுபூர்வமான செயல்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால் இன்று காட்டுயிர் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவது, அகிம்சை சம்பந்தப்பட்டதாயிருக்கின்றது, புனிதப்பசுவைப் பாதுகாப்பது போல. இது தவறானது மட்டுமல்ல, துரதிருஷ்டவசமானது.”