வியாழன், ஆகஸ்ட் 13, 2009

நாராய்.. நாராய்.. புலம் பெயரும் புள்ளினம்

ஜனவரி மாதத்தின் ஒரு காலை. மூடுபனி விலகி, இதமான வெயில் படர ஆரம்பித்திருந்தது. வேலூரிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்றிருப்போம். வலதுபுறத்தில், ஒரு வறண்ட ஏரியில் இரண்டு, பெரிய வெள்ளை நிறப்பறவைகள் இரை தேடிக் கொண்டிருப்பதை கவனித்தோம். அந்த ஜோடிக்கு ஒரு நூரடி தூரத்தில் கிராமத்து ஆட்கள் சிலர் வட்டமாக அமர்ந்து ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். வண்டியை நிறுத்தி விட்டு பைனாகுலரைப் பொருத்திப் பார்த்தேன். கதிரவனின் ஒளி பட்டு வெண்ணிற உடல் மின்னியது. நீண்ட செந்நிறக் கால்கள். செங்கால் நாரைகள்!

வெண்கொக்கு போன்ற உடலமைப்பு. ஆனால் உருவில் பெரியது, ஒரு மீட்டர் உயரமிருக்கும். நீண்ட, சிவப்பு வண்ணஅலகு. ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த நாரை குளிர் காலத்தில் மட்டும் இங்கு வரும். ஐரோப்பிய ஐதீகத்தில் இந்த நாரை தான் குழந்தையைக் கொண்டு வரும் பறவை. இதன் உருவையும், அலகின் பரிமாணத்தையும் கவனித்தால் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வரும் திறன் கொண்டது போல்தான் தெரிகின்றது. அங்கே, முக்கியமாக ஹாலந்து, போலந்து நாடுகளில் இந்த நாரை மக்களுக்கு நெருங்கிய பறவைகளில் ஒன்று. நம் கிளிப் பிள்ளை மாதிரி. ஆனால் அதை அவர்கள் வளர்ப்பதில்லை. வீட்டு மாடியில், அதிலும் புகைபோக்கியில் கூடு கட்டினால் அதை ஒரு பாக்கியம் என்று கருதுகின்றனர். அதைப் பாதுகாக்க வீட்டுக்காரருக்கு அரசு ஒரு ஊக்கத்தொகை கொடுக்கின்றது. மனிதரின் அருகாமைக்கு இவை நன்கு பழகியிருக்கின்றன.

ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளிலுள்ள ஏரிக்கரையோரமுள்ள மரங்களிலும் சுள்ளிகளாலான பரந்த கூடுகளை இந்த நாரைகள் கட்டுகின்றன. அதே இடத்திற்கு, அதே மரத்திற்கு வருடாவருடம் வந்து, பழைய கூட்டைப் புதுப்பித்து இனப் பெருக்கத்தைத் தொடர்கின்றன. ஆணும் பெண்ணும் மாறி மாறி அடைகாத்து, குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. குளிர்காலத்தில், ஐரோப்பாவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றன. வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன. பறவையியலாளர்கள் சில நாரைகளைப் பிடித்து, அதன் கால்களில் சிறு வளையங்கள் பொருத்தி அவை போகும் இடம், போகும் பாதை இவற்றைக் கணிக்கின்றார்கள். தமிழ் நாட்டிலும் வருடாவருடம் கோடிக்கரை பறவைச் சரணாலயத்தில் இந்த வளையம் பொருத்தும் வேலை நடக்கின்றது.

பறவைகள் உலகில் உள்ள இந்தப் புலம்பெயரும் வழக்கம் அறிவியலுக்கு விளங்காத பெரும் புதிராகவே இருக்கின்றது. சிட்டுக்குருவி அளவு உள்ள புள்ளினத்திலிருந்து, வல்லூறு, நாரை போன்ற பல இனப் பறவைகள் இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் வலசை போகின்றன. ஒரு பறவை இனம் எந்த நாட்டில், எந்த இடத்தில் கூடுகட்டுகின்றதோ அந்த இடத்தைச் சேர்ந்தது.

குளிர்காலத்தில் தரை பனியால் மூடப்படும் போது இவை வெப்ப நாடுகளுக்கு வலசை போகின்றன. அக்டோபரில் இந்தியா வந்து சேரும் இவை, மார்ச் ஏப்ரல் மாதங்களில் திரும்பிப் போகின்றன. அங்கே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து விட்டு, மறுபடியும் அக்டோபரில் பயணத்தை ஆரம்பிக்கின்றன. எப்படி ஒவ்வொரு ஆண்டும் அதே இடத்திற்கு வலசை போன்றன, எப்படி வழி கண்டு பிடிக்கின்றன என்ற கேள்விகளுக்கு இன்னும் பதிலில்லை. இயற்கையின் பெரிய புதிர் இது. பறவைகளின் காலில் மாட்டப்படும் ப்ளாஸ்டிக் வளையத்தின் நிறத்தை வைத்து இது எந்த நாட்டில் பொருத்தப்பட்டது என்றறிய முடியும். இதற்கு அந்தப் பறவையைப் பிடித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. சென்ற மாதம் சென்னை தி ஸ்கூல் பள்ளி ஆசிரியர் அருண், திருநெல்வேலிக்கருகிலுள்ள கூந்தங்குளத்தில் பறவைகளை பைனாகுலர் மூலம் அவதானித்துக் கொண்டிருந்தபோது பட்டைத்தலை வாத்து ஒன்றின் காலில் மஞ்சள் வளையம் மாட்டப்பட்டிருந்ததைக் கண்டார். பிறகு இணையத்தளத்தொடர்புகள் மூலம் இது மங்கோலியாவில் மாட்டப்பட்ட வளையம் என்றும், அங்கு தான் இந்த வாத்துக் கூட்டம் கூடுகட்டி இனவிருத்தி செய்கின்றன என்றும் அறிந்தார். மங்கோலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு ஆண்டாண்டு பயணம் செய்யும் வாத்து பற்றிய இந்தத் தகவலை அருண், Tamilbirds என்ற யாஹூ குழுவுடன் பகிர்ந்து கொண்டார்.

அண்மையில் பறவைகளின் கால்களில் வளையத்தைப் பொருத்துவதற்கு பதிலாக, சிறு chip ஒன்றை பறவையின் உடலில் பொருத்தி, விண்கோள் வழியாக துல்லியமாக பறவை வலசை போகும் பாதையையும் வேகத்தையும் அறிய முடிகின்றது. இம்முறையை பயன்படுத்தியதால் ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. சிலமாதங்களுக்கு முன், பேருள்ளான் (Godwit) என்ற புறா அளவிலான பறவை, வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்காவிலிருந்து, உலகின் அடுத்த கோடியிலுள்ள நியூசிலாந்திற்கு வலசை சென்றது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 17,460 கி.மீ தூரத்தை, இந்தப் பறவை 9 நாட்களில் கடந்துள்ளது. மூன்றே இடங்களில் இரையுண்ணத் தரையிறங்கியது. நான்காவது கட்டத்தில் 11000 கி.மீ தூரத்தை, இரவு பகலாக ஒரே மூச்சில் பறந்து முடித்து நியூசிலாந்தில் மிரான்டா என்ற இடத்தில் இறங்கியது. ஒரு பெரிய கூட்டமாகத்தான். இதை நான் எழுதும் போது ணி7 என்று பெயரிடப்பட்ட இந்தப் பறவை மிரான்டாவில் இருக்கின்றது. இந்த விவரங்கள் உயிரியலாளர்கள் மத்தியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. புள்ளினம் புலம் பெயர்வதின் மர்மம் தொடர்கின்றது. (பேருள்ளான் பறவையை சென்னைக்கருகில் முட்டுக்காடு, மாமல்லபுரம் இங்குள்ள நீர்நிலைகளில் காணலாம்.)

இப்படி வலசை போகும் பறவைகளின் விண்பாதையைக் கணித்து ஒரு உலக வரை படமே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பாதைகளை skyway என்கிறார்கள். இந்த விண்பாதை கடலோரமாகவே அமைந்திருக்கும். சமுத்திரப்பரப்பைக் கடப்பதை இப்புள்ளினங்கள் முடிந்த வரை தவிர்க்கின்றன. ஐரோப்பாவிலிருந்து செங்கால் நாரைக் கூட்டங்கள், ஆப்பிரிக்காவை ஏறக் குறைய தொட்டுக்கொண்டிருக்கும் ஜிப்ரால்டர் மேல் பறந்துதான் ஆப் பிரிக்காவிற்குள் செல்கின்றன. இந்த உலக பறவைப் பாதை வரைபடத்தை National Geographic Magazine தனது சந்தாதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அன்பளிப்பாக அனுப்பியது.

இவை வலசை போகும்போது திரளாகக் கூடிப் பறந்தாலும், நம் நாட்டில் ஒன்று அல்லது இரண்டாகத் தான் செங்கால் நாரைகளை நாம் காண முடிகின்றது. ஒரே ஒரு முறை, குஜராத்திலுள்ள வேலவதார் சரணாலயத்தில் பன்னிரண்டு நாரைகளை நான் ஒரு சிறு குட்டையில் பார்த்தேன். குட்டை வற்றி அதில் நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கு ஒரு ராட்சதக் கொப்பரையில் எண்ணெய் கொப்பளித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அதே போன்ற ஒலியையும் கேட்டோம். நாரைகள் போட்டி போட்டுக்கொண்டு அவைகளைப் பிடித்துண்பதை நாங்கள் வெகு நேரம் பார்க்க முடிந்தது. மீன்களை மட்டுமின்றி, தவளை, நண்டு, வெட்டுக்கிளி போன்ற உயிரினங்களையும் செங்கால் நாரை இரையாகக் கொள்ளும்.

ஆயிரத்திஐநூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணதிற்கருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு வலசை போகும் செங்கால் நாரை ஜதை ஒன்றைக் கவனித்திருக்கின்றார். சத்திமுத்தப் புலவர் எழுதியதாகக் கூறப்படும் கவிதை இந்த நாரையை வர்ணித்து, தூது போகும்படி கேட்டுக் கொள்கின்றது.

நாராய்...நாராய்...செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்தவாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

ஆனால் இன்று உலகின் மற்றெல்லாப் பறவையினங்களையும் போலவே செங்கால் நாரையும் அரிதாகிக் கொண்டு வருகின்றது. வாழிடங்கள் சீரழிக்கப்பட்டதாலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் நீர்நிலைகளை மாசுபடுத்தி சிற்றுயிர்களை அழித்து விட்டதாலும் பறவையினங்கள் அற்றுப் போய்க்கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றமும் புள்ளினங்களுக்குப் பாதமாகின்றது. அதனால்தான் ஆரணி சாலையில் நாங்கள் அந்தக் காலையில் பார்த்த காட்சி காணற்கரிய ஒன்றாகின்றது.

*

-தியடோர் பாஸ்கரன்

படங்கள்: நித்திலா பாஸ்கரன்

நன்றி: உயிர்மை ஏப்ரல் 2009

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையான கட்டுரை. ஆங்கிலத்தில் இதுபோன்ற கட்டுரைகள் அதிகம்மாக வெளிவருகிறது. தமிழில் இப்படியெல்லாம் எழுத ஆள் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் இந்த கட்டுரையின் அருமை பலருக்கும் புரியவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்.

vels-erode சொன்னது…

அருமையான கருத்துககள்.................எனக்கு ப் ப்டிச்சிருக்கு! KSR FM- 90.4ல் இதன் தொடர்பு கிட்டிற்று.

கருத்துரையிடுக