வியாழன், ஆகஸ்ட் 06, 2009

வறட்சியும் வெள்ளமும்

கடும் வறட்சியை நாடு எதிர்நோக்கியிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. மழையளவு 20% குறையும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஒரிசாவிலிருந்து பஞ்சாப் வரையிலான பகுதிகள் பாதிப்படையும். தானியக் களஞ்சியங்களான மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகியவை இதில் அடக்கம். அசாம் மாநிலம் ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் வறட்சி பாதித்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. விரைவில் நல்ல மழை பெய்யாவிட்டால், இந்த நிலை இன்னும் தீவிரமடையும்.

கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சியை இந்தியா சந்திக்கவில்லை. எனினும் வறட்சி நிலைமை இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் வறட்சியைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், இந்த ஆண்டில் அறிவிப்புகளைப் பார்க்கும்போது சில முரண்பாடுகள் தெரிகின்றன. உதாரணமாக, வடக்கு குஜராத்தில் வறட்சி நிலவும் நிலையில், மேற்கு குஜராத் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இதுதான் புதிய சிக்கல்.

1966-ம் ஆண்டில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வறட்சி நிலையை நான் நேரடியாகவே கண்டேன். அது எனது முதல் அனுபவம். வயல்களில் பயிர்கள் மடிந்து கிடந்தன. கடும் வெப்பத்தால், நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுக் காய்ந்து கிடந்தன. நீர்நிலைகளில் சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. சாலையோரங்களில் கால்நடைகள் மடிந்து கிடந்தன. உண்மையில் அந்த ஆண்டுதான் வறட்சி நிவாரணத்துக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. மத்திய அரசுடன் இருந்த நெருக்கத்துக்கு ஏற்ப மாநிலங்கள் நிதியைப் பெற்றுக் கொண்டன.

இந்த மாதிரி தருணங்களில், அந்தப் பகுதியை வறட்சிப் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அரசியில் கட்சிகளும், உள்ளூர் அதிகாரிகளும் வலியுறுத்துவார்கள். அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. வறட்சிப் பகுதியாக அறிவிக்கும்வரை, அரசுப் பணத்தைச் செலவழிப்பதற்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கும்; ஆனால், வறட்சியை முறையாக அறிவித்து விட்டால், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிதியைக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், கடுமையான வறட்சியைப் பலமுறை இந்தியா சந்தித்திருக்கிறது. அந்தக் காலத்தில் போதுமான அளவு மழை பெய்தது. ஆயினும் போக்குவரத்து வசதிகளும், சேமிப்புக் கிடங்குகளும் இல்லாததால் நாடு வறட்சியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷ் கம்பெனியார் இந்தியாவுக்கு வந்தபோது ஏற்பட்ட வறட்சி குறித்து பிலிப் உட்ரஃப் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தில்லியில் இருந்த முகலாய மன்னரைச் சந்தித்து மரியாதை செய்வதற்காக சூரத்திலிருந்து தில்லி வந்த கம்பெனி பிரதிநிதிகள், சாலையோரமெல்லாம் பிணங்கள் கிடப்பதைக் கண்டனராம். அவற்றை எண்ணுவதற்குக் கூட அப்போது ஆளில்லை என்கிறது அந்தப் புத்தகம்.

1991-ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி உட்ரஃபின் குறிப்பை எனக்கு நினைவூட்டியது. அந்த ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. வறட்சிப் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி வந்தது. இதனால், உத்தரப் பிரதேசம், வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவ்வளவுதான். வானம் பொத்துக் கொண்டு மழை பிடித்தது. ஆகஸ்ட் தொடக்கத்தில் தொடங்கி செப்டம்பர்வரை மழை நீடித்தது. நிலைமை முற்றிலுமாக மாறிப்போனது. உத்தரப் பிரதேசம் முழுவதும் வெள்ளக்காடானது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பயிர்கள் அழிந்தன. வரலாற்றில் முதல்முறையாக மழையின் காரணமாக உத்தரப் பிரதேசம் சந்தித்த மிக மோசமான வறட்சி அதுதான்.

வறட்சியால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது பற்றி பழைய அனுபவங்களிலிருந்து அரசு என்ன கற்றுக் கொண்டிருக்கிறது? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வறட்சி நிவாரணத்தில் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடினமான தருணங்களைச் சமாளிக்கும் வகையில், நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கும், குறு விவசாயிகளுக்கும் தினக்கூலி அடிப்படையிலான குறுகியகால வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. நில வரி வசூல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த மூன்று முக்கிய கருவிகளையும் அரசுகள் இன்றைக்கும் பயன்படுத்தி வருகின்றன. வித்தியாசம் என்னவென்றால், தேவையான காலத்தில் மட்டுமல்லாமல், தேவையில்லாத காலத்திலும் இது வழக்கமாக இருக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் சாதாரணமான காலத்திலும், வறட்சிக் காலத்திலும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஆண்டு முழுவதும் உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. நில வரி வசூல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதுபோக, நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

இப்படியாக, ஒரு சிறப்புக் கருவியாகப் பயன்படுத்த வேண்டியவற்றை தேவையற்ற பகுதிகளிலும் தேவையற்ற நேரங்களிலும் பயன்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை அரசு குறைத்திருக்கிறது.

வறட்சிக் காலத்தில் பயன்படுத்த வேண்டிய சிறப்புக் கருவிகள் தினசரிப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. நோய் இருக்கிறதோ இல்லையோ தினசரி மருந்து சாப்பிட்டாக வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவின் கிராமப்புறங்கள் எப்போதும் வறட்சியாகவே இருக்கின்றன என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் இது. வறட்சியைச் சமாளிப்பதற்கு ஏற்கெனவே இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தியாகிவிட்டது. புதிய சிறப்புக் கருவிகளை உருவாக்க வேண்டுமல்லவா?

ஆண்டுதோறும் வறட்சி நிவாரணமும் வெள்ள நிவாரணமும் வழக்கமான பணிகள். பாதிக்கப்பட்ட பகுதிகளை 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து அமைச்சர் பார்வையிடும் படங்களை பத்திரிகைகள் சலிக்காமல் வெளியிடுகின்றன. பழைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டால் வித்தியாசங்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு ஒரே மாதிரியான நடப்புகள். இப்படியே போனால், பழைய புகைப்படங்களையேகூட ஒவ்வோர் ஆண்டும் பத்திரிகைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். என்ன கேலிக்கூத்து இது.

அடிப்படைப் பிரச்னையைத் தீர்க்கும் வகையிலான நீண்டகாலத் திட்டங்களை வகுக்காமல் போனதால்தான், வறட்சியும் வெள்ளமும் தீராத நோய்களாக மாறியிருக்கின்றன. மின்வெட்டு, நீர் பற்றாக்குறை போன்றவற்றுக்கும் நீண்டகாலத் திட்டங்கள் இல்லாததே காரணமாகும்.

சாதாரணக் குடிமகன், சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், குடிசைவாசிகள் ஆகியோருக்கு உரிய சமூகப் பாதுகாப்பும் வருவாய் உத்தரவாதமும் இல்லை. வறட்சி, வெள்ளம் போன்றவை ஏற்படும் காலங்களில் இவர்களது நிலைமை இன்னும் பரிதாபமாகிப் போகிறது.

நம்பத் தகுந்த பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்தாமல் இருப்பது மிகப் பெரும் குறை. கணினிமயமாக்கப்பட்ட நில ஆவணங்கள் இல்லாததும், நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊழல் தாண்டவமாடுவதும் நிலைமையை இன்னும் சிக்கலாக்குகின்றன.

இதனால், வறட்சி ஏற்படும்போது ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஏழைகளுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்படுகிறது.
மக்களாட்சி என்ற போர்வையில் இயங்கும் அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதுதான் இதில் வேதனையளிக்கும் விஷயம்.

ஆட்சியாளர்களுக்கு இதில் அக்கறையே இல்லை. அவர்களது முதல்பணி சென்செக்ஸை உயர்த்துவது,

அப்புறம் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வது.

-டி. எஸ். ஆர். சுப்பிரமணியன்
நன்றி: தினமணி.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

sindigavendiyathu

கருத்துரையிடுக