வியாழன், ஜூலை 28, 2016

ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்..! - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்

ரு பக்கம் இந்தியா அதி தீவிரமாக, அணுசக்தி விநியோக நாடுகள்  குழுவில் (என்.எஸ்.ஜி)  சேர முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம் அணுசக்திக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் செயற்பாட்டாளர்கள், “நிச்சயம் இதனால் எந்தப் பயனும் இல்லை. வளர்ந்த நாடுகளின் காய் நகர்த்தலில் இந்தியா  பரிதாபமாக பலியாடாகப் போகிறது...” என்கிறார்கள்.
இத்தகைய சூழலில், என்.எஸ்.ஜி குறித்து பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வில், இயற்பியலாளர் சுவரத் ராஜூவை சந்தித்தோம். சுவரத், அமெரிக்கா ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். டாடா ஆய்வு மையத்தின் ஒரு பிரிவான அறிவியல் கோட்பாட்டுக்கான சர்வதேச ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். குவாண்டம் கிராவிட்டி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.  

 
இவை மட்டும் இவர் அடையாளங்கள் அல்ல... அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.
அவர் நம்முடனான உரையாடலை இவ்வாறாகத்தான் துவங்கினார்,
“இனி, ஒரு யூனிட் மின்சாரம் ரூ 25 என்று சொன்னார்கள் என்றால், உங்களால் அதை ஒத்துக் கொள்ள முடியுமா...? நான் அணு உலைகளின் பாதுகாப்பைப் பற்றி பேசவில்லை, அதன் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறேன். நிச்சயம், இந்த அணு உலைகள் வளர்ச்சியின் குறியீடு அல்ல...” என்று அணு ஆற்றலின் பொருளாதாரம் குறித்துப் பேசியவரிடம், நம் கேள்விகளை முன் வைத்தோம். 

நீங்கள்  அணுசக்தி விநியோக நாடுகள்  குழுவில் இந்தியா சேருவதற்கான முயற்சியை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள்.  இதுபோன்ற வலுவானக் குழுவில் சேர்ந்தால் இந்தியாவிற்கு நன்மை பயக்கும்தானே... ஏன் எதிர்க்கிறீர்கள்?
நன்மையா...? என்ன நன்மை என்று இதற்காக பேசுபவர்கள் விளக்க முன் வருவார்களா... உண்மையில் இதனால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் இல்லை. இது அவர்களுக்கு நன்கு தெரியும். நிச்சயம் வளர்ந்த நாடுகள், நம்மிடம் எந்த தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ளாது. 

இந்தியாவில் ஆறு அணு உலைகளை அமைக்க உள்ள வெஸ்டிங்க் ஹவுஸ்  ஒப்பந்தத்தை கடுமையாக சாடுகிறீர்கள்...  அவர்களுக்கு அணு உலை அமைக்க ஒப்பந்தம் அளிப்பது ஊழலுக்கு தான் வழிவகுக்கும் என்கிறீர்கள்... ஏன் என்று விளக்க முடியுமா?
உங்கள் பகுதியில் புதிதாக சாலை போட மாநகராட்சி தீர்மானிக்கிறது. முதலில் என்ன செய்யும்? அந்த பணிக்காக டெண்டர் விடும்தானே... யார் குறைவான தொகையில் ஒப்பந்தம் கோருகிறார்களோ, அவர்களுக்கு அளிக்கும்தானே... அதுதானே சரியான நடைமுறையும் கூட. சில கோடிகளில் போடப்படும் சாலைகளுக்கே இவ்வளவு நடைமுறை இருக்கும்போது, பல்லாயிரம் கோடிகள் பணம் புரளப்போகிற இந்த திட்டத்திற்கு, அதுபோன்ற எந்த ஒப்பந்தத்தையும் அரசு கோரவில்லை. அது எதேச்சதிகாரமாக, தானே முடிவெடுத்து ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கிறது. இது எப்படி சரியான நடைமுறை ஆகும்...?

சரி... இவர்கள் ஒப்பந்தம் அளித்த நிறுவனமாவது தகுதியான நிறுவனமா என்றால், அதுவும் இல்லை. அது அமெரிக்காவில் நஷ்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிறுவனம். இதை அணு உலையை ஆதரிப்பவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்.

இப்போது இவர்கள் இந்தியாவில் நிறுவப் போகும் அணு உலை புதிது. இதுபோன்ற அணு உலைகள் உலக நாடுகளில் வேறெங்கும் செயற்பாட்டில் இல்லை. இது போன்ற அணு உலைக்காக, 60 பில்லியன் தொகையை, எந்த ஒப்பந்தமும் கோராமல், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு அளிப்பது நிச்சயம் விவாதத்திற்கு உரியது. 

ஏன் இது குறித்து பெரிதாக  விவாதம் எழவில்லை...? 
நாங்கள் தொடந்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறோம். இந்த நிறுவனம் (வெஸ்டிங் ஹவுஸ்),  அமெரிக்காவின் என்ரான் நிறுவனம் (திவாலான நிறுவனம்) போல ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இதை பா.ஜ.க வும், காங்கிரசும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. 
அணு உலையைப் பற்றி பேசும்போதெல்லாம்,  அணு உலையின் பாதுகாப்பைப் பற்றி மட்டும் பேசுகிறார்களே தவிர, அதன் பின்னால் இருக்கும் இது போன்ற ஊழல் குறித்துப் பேசுவதில்லை... முக்கிய கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இது குறித்து தெரிந்தவர்கள், இதைப் பற்றி பேசாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இதை எதிர்த்தால், தங்களை வளர்ச்சிக்கு எதிராக, மின்சார உற்பத்திக்கு எதிரானவர்களாக சித்தரித்து விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.  

நீங்கள் தொடர்ந்து அணு ஆயுத பரவலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறீர்கள் அல்லவா...  மக்களுக்கு இது குறித்த விழிப்பு உணர்வு இருக்கிறதா... அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
நாங்கள் இது குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். உதயகுமார்,  கூடங்குளத்தில் மக்களை ஒருங்கிணைத்து  வருகிறார். அதுபோல ஜெய்தாப்பூரிலும் இயக்கங்கள் இருக்கின்றன.  இவர்கள், அணு உலை திட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் மக்களை ஒருங்கிணைத்து, பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இறுதியில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, மக்களால் தொடர்ந்து தங்களது போராட்டத்தை முன்னெடுக்க முடிவதில்லை.      

இன்னொரு பக்கம், மக்களை ஒருங்கிணைக்கும் தலைவர்கள் இந்த பொருளாதாரப் பின்னணி குறித்து பேசினாலும், மக்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மட்டும் அச்சப்படுகிறார்களே தவிர, அவர்களும் இதன் பின்னால் உள்ள ஊழல்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இது புரிந்துகொள்ளக் கூடியதுதான்... மக்கள் பாதுகாப்பே கேள்விக் குறியாகும்போது, மற்ற விஷயங்கள் பின்னால் செல்வதில் வியப்பில்லை.     

ஆனால், அனைத்து மக்களும் இதன் பொருளாதாரம் குறித்து நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நேரடியாக பாதிக்கப்படப்போவது அவர்கள்தான். வெஸ்டிங் ஹவுஸால் நிறுவப்படப் போகும் AP 1000 செயல்பாட்டிற்கு வந்தால், அதனால் உற்பத்தி செய்யப்படப் போகும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை குறைந்தது ரூ. 25 இருக்கும். என்னதான் மானியம் கொடுத்து, விலையை கட்டுப்படுத்த முயன்றாலும், அது பொருளாதார சீரழிவைத்தான் உண்டாக்கும்.


ஒரு வேளை அந்த உலை சிறப்பாக செயற்பட்டு, நிர்ணயத்த மின்சார இலக்கை உற்பத்தி செய்தால், மின்சார விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா...?
நீங்கள் இன்னும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. இதுபோன்ற உலைகளை நிறுவுவதற்கான முதலீடு என்பது மிக அதிகம். அந்த முதலீட்டிற்கான வட்டி விகிதங்களை கணக்கிட்டு பாருங்கள்... 
மக்கள் பாதுகாப்பு என்பதையெல்லாம் விட்டுவிடுங்கள். அவர்கள் மொழியிலேயே பேசுவோம். 'அணு உலை வளர்சிக்கானது, முன்னேற்றத்திற்கானது' என்கிறார்கள். ஒரு கோடி முதலீடு செய்து, ஒரு ரூபாய் பெறுவதா முன்னேற்றம்...? இது ஏமாற்று வேலை.
இதே தொகையை வேறு ஏதாவது மின்சார திட்டங்களில் செலவிட்டார்கள் என்றால், நிச்சயம் இதை விட அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்து விடமுடியும்.  அணு உலையின் ஆதரவாளர்கள், அதன் எதிர்ப்பாளர்களை  ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ (Anti - National) என்று வர்ணிக்கிறார்கள். உண்மையில் தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற பெருந்திட்டங்களை ஆதரிப்பதன் மூலம், அவர்கள்தான் Anti- National ஆக இருக்கிறார்கள்.

இதுபோன்ற பெருந்திட்டங்களில், இவ்வளவு தொகையை செலவிடுவதற்கு பின்னால், ஊழல் ஒரு பிரதான காரணமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  

அதை கொஞ்சம் விளக்க முடியுமா...?
வளர்ச்சி என்ற மந்திர சொல் பின்னால் ஒளிந்துகொண்டு, ஒன்றுக்கும் உதவாத திட்டத்துக்காக அரசாங்கத்தின் கருவூலத்திலிருந்து பெரும் பணத்தை எடுத்துச் சென்று, வேறொரு நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் கையில் கொடுப்பதும் ஒரு விதமான ஊழல்தானே...?

இந்த என்.எஸ்.ஜியால் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா...?
வளர்ந்த நாடுகள் மிக தந்திரமாக செயல்படுகின்றன. மன்மோகன் ஆட்சி காலத்தில் இந்தியா, அமெரிக்காவிடம் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதற்கு பிரதிபலனாக, இந்தியாவுக்கு  2008 ம் ஆண்டு அணுசக்தி எரிபொருள், தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட உரிமை கிடைத்தது. இதன் காரணமாக, சர்வதேச நாடுகளிலிருந்து யுரேனியத்தை இந்தியாவால் வாங்க முடிந்தது. ஆனால், அதைக் கொண்டு நாம் உற்பத்தி செய்த மின்சாரம், நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி தேவையில் ஒரு சதவீதம் தான். 

இதன் தொடர்ச்சியாகத்தான் நான் என்.எஸ்.ஜியை பார்க்கிறேன். வறட்டுக் கெளரவத்திற்காக ஒரு குழுவில் இடம்பெற்று என்ன ஆகிவிடப் போகிறது. 'இதில் இடம்பெற்றால் நமக்கு செறியூட்டப்பட்ட யுரேனியம் கிடைக்கும்' என்பது உங்கள் வாதமாக இருந்தால், அது நிச்சயம் நகைப்பிற்குரியதுதான். ஏனென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளும் கன நீர் அணு உலைகள். அதற்கு இது பயன்படாது. 

இன்னொரு விஷயம், 2008 ஒப்பந்தமே நமக்கு தொழில்நுட்ப வர்த்தகத்தில் ஈடுபட உரிமைகள் வழங்கி இருக்கிறதே... பின் ஏன் இந்த என். எஸ். ஜி. ? உண்மையில் என். எஸ். ஜி யால் எந்தப் பயனும் இல்லை.

- மு. நியாஸ் அகமது 

 நன்றி: விகடன்.காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக