வியாழன், ஜனவரி 09, 2014

இந்திய விவசாயத்துக்கு சமாதி கட்டும் காங்கிரஸ்! பாழாய் போன பாலி ஒப்பந்தம்...

'வளர்ந்த நாடுகள், விவசாயத்துக்குக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தும் வரை, விவசாயத்தைத் தடையற்ற உலக வணிக ஒப்பந்தத்தில் சேர்க்கக் கூடாது’
-2013 டிசம்பர் 5 வரை, இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால், 6-ம் தேதியன்று அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, 'உலக ஜோதி'யில் இந்தியாவையும் சேர்த்துவிட்டிருக்கிறது, இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு. இதன் மூலமாக, இந்தியாவின் எதிர்கால விவசாயத்துக்கு ஒரேயடி யாக சமாதி கட்டும் வேலையைத் தீவிரமாக இந்த அரசு முடுக்கி விட்டிருக்கிறது என்றே வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கிறது!
1995-ம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டது. அன்று முதல், பல்வேறு பிரச்னைகளில் உலக நாடுகளிடையே ஒருமித்தக் கருத்து எட்டப்பட்ட போதும்... விவசாயத்துக்கான மானியம், இறக்குமதி வரி, சேவை இவை மூன்றிலும் கருத்து வேறுபாடுகளே நிலவிவந்தன. குறிப்பாக, 'விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பின் வரையறைக்குள் விடவே கூடாது' என்று வளரும் மற்றும் ஏழை நாடுகள் விடாப்பிடியாகக் கூறிவந்தன.
2001-ம் ஆண்டு தோஹாவில் நடந்த உலக வர்த்தக மந்திரிகள் மாநாட்டில், பங்கேற்ற அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் 'முரசொலி' மாறன், 'வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு மானியங்களை அள்ளித் தருவதை நிறுத்தும் வரை, விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பின் வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது’ என்று ஓங்கி ஒலித்தார். இதே கருத்தை முன் வைத்துதான் இந்தியாவிலிருக்கும் பல்வேறு விவசாயச் சங்கங்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம், 'உணவுப் பொருட்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று வளர்ந்த நாடுகள் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருந்தன. காரணம், தங்கள் நாடுகளில் விளைந்து கிடக்கும் பொருட்களை... வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கொண்டு வந்து கொட்டி, பணம் பண்ணுவதற்காகத்தான். இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து, ஒவ்வொரு முறையும் தோல்வி கண்ட வளர்ந்த நாடுகள், தற்போது கிட்டத்தட்ட வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டன! டிசம்பர் 3 முதல் 6 வரை... இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் நடைபெற்ற, உலக வர்த்தக அமைப்பில் (WTO) இடம்பெற்றுள்ள நாடுகளின் மந்திரிமார்களின் ஒன்பதாவது மாநாட்டில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டு விட்டது!
'நல்ல ஒப்பந்தம் கையெழுத்து ஆகா விட்டாலும் பரவாயில்லை, கெட்ட ஒப்பந்தத் துக்கு ஒருபோதும் துணைபோக முடியாது’ என்று, மாநாட்டின் தொடக்கத்தில் மார்தட்டினார் இந்திய வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா. 'மானியம் கொடுத்து ஏழை விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதிலும், அவற்றை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்குவதிலும் யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டோம். ஏழைகளுக்கு சோறு போடுவது எங்கள் உரிமை. 82 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அவசியம். மாதம் 5 கிலோ உணவு தானியம் கொடுப்பதாக உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றி உள்ளோம். எங்கள் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு நாங்கள் கொடுக்கும் மானியம், அதாவது குறைந்தபட்ச ஆதார விலையைத் தொடர்ந்து கொடுப்போம். மலிவு விலையில் ஏழைகளுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்களைக் கொடுப்போம். இது எங்களுக்காக மட்டுமல்ல... உலகில் உள்ள 400 கோடி ஏழைகளுக்கான குரல்...'' என 'உக்கிரபுத்திரன்' கணக்காக பேசிய ஆனந்த் சர்மா, மாநாட்டின் நிறைவு நாளில்... வளர்ந்த நாடுகள் கொண்டுவந்த தடையற்ற வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, '23-ம் புலிகேசி'யாய் மாறிப் போனதைப் பார்த்து... அத்தனை நாட்டு மந்திரிகளும் ஆடித்தான் போனார்கள்.
''இந்தியாவில் உள்ள நடுத்தட்டு மக்களின் எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகம். அந்த நடுத்தட்டு மக்களின் வாங்கும் சக்தி கூடி இருக்கிறது. எனவே, என்ன விலை கொடுத்தும் ஒப்பந்தம் நிறைவேற வேண்டும். இந்திய சந்தைதான் நமது ஒரே கனவு''
- இது உலக வர்த்தக அமைப்பின் ஐந்தாவது மந்திரிகள் மாநாட்டில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளியிட்ட பிரகடனம். அந்தக் கனவு, இப்போது நிறைவேறியுள்ளது.
இனி, உணவுச் சந்தையிலும் உலக நாடுகளின் குப்பைகள், கழிவுகள் எல்லாம் கொண்டு வந்து கொட்டப்படும். கொழுத்த மானியத்தில் விளைந்த அமெரிக்க நாட்டின் கெட்டுப்போன உணவு தானியங்கள், அதாவது மரபணு மாற்றப்பட்ட விஷ தானியங்கள், தயாரிப்புகள், ஐரோப்பாவின் பால், பால் பொருட்கள் (இவையும் கொழுத்த மானியத்தில் பிறந்தவைதான்) என்று பலவும்... இந்திய சந்தையில் தடையின்றி வலம் வரும்.
'உலக நாடுகள், தங்கள் நாட்டின் பொருட்களை இந்திய சந்தையில் விற்க வசதியாக, நவீனத் துறைமுகங்கள், நவீன விமான நிலையங்கள், நவீன ரோடுகள் போட்டுத் தரவேண்டும். இந்திய சந்தையில் விற்பனை செய்வதில் சிறுதடங்கலும் இருக்கக் கூடாது. அப்படி ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அபராதம் விதிக்கப்படும்’ என்றெல்லாம் எழுதப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல்... 'இது வரலாற்று நிகழ்வு’ என்று ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஆனந்த் சர்மா.
ஆம், பேரழிவும்... ஒரு வரலாற்று நிகழ்வுதானே!
'வளரும், ஏழை நாடுகளில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% மேல் இருக்கக் கூடாது’ என்பதுதான் வளர்ந்த நாடுகளின் நிபந்தனை. இதுவரை வளர்ந்த நாடுகள், விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியங்களைக் குறைத்ததாக தகவல் இல்லை. சொல்லப்போனால் கூடுதலாகத்தான் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த ஆண்டுகூட... 130 பில்லியன் டாலர்கள் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பத்தில் ஒரு பங்குகூட இந்தியாவில் இருக்கும் 70 கோடி விவசாயிகளுக்கு இல்லை. ஏதோ கணக்கு காட்ட உர மானியம் என்று கொஞ்சம் போல கொடுக்கிறார்கள். அதுவும் நேராக உரக் கம்பெனிகளுக்குத்தான் செல்கிறதே தவிர, வளர்ந்த நாடுகளில் விவசாயிகளுக்குக் கிடைப்பதுபோல, நேரடியாக இந்திய விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.
இன்று, வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் கோதுமை 1,700 ரூபாய்க்கு விற்கிறது. நெல், 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. ஆனால், அரசு கோதுமையை 1,400 ரூபாய்க்கும், நெல்லை 1,360 ரூபாய்க்கும்தான் கொள்முதல் செய்கிறது. இதில் அரசு மானியம் எங்கிருந்து வந்தது? சொல்லப் போனால், விவசாயிகள்தான் அரசுக்கு மானியம் கொடுத்து வருகிறார்கள்.
ஆக, விவசாயிகளை ஒழித்து, கொள்ளை அடிக்க ஏதுவாக பாலி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மத்திய அரசு. இதன் மூலம் இந்திய விவசாயம் அழிவின் விளிம்புக்குத் துரத்தப்படும்; வேலைகள் பறிபோகும்; 82 கோடி பிச்சைப் பாத்திரங்கள், 100 கோடிக்கும மேலாக வளரும். ஆம், இதுதான் நிதர்சனம். ஒரு சில பன்னாட்டு கம்பெனிகள் பணத்தில் கொழுப்பதற்காக... 70, 80 கோடி மக்களின் ஜீவாதாரமும்... இந்தியாவின் இறையாண்மையும் காவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கெனவே, அமெரிக்காவில் இருந்து கோதுமை மூலம் வந்த சீதனங்கள்தான்... பார்த்தீனியம் என்ற விஷச் செடி, வேலி கருவேல் முள் இவையெல்லாம். இந்த பாலி ஒப்பந்தம் மூலமாக, இன்னும் எத்தனை விஷச் செடிகள் வரவிருக்கின்றனவோ தெரியவில்லை.
மொத்தத்தில்... பாலி ஒப்பந்தம், விவசாயி களைப் பொருத்தவரை பாழாய்ப்போன ஒப்பந்தமே!

-தூரன் நம்பி
நன்றி: பசுமை விகடன், 10-01-2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக