புதன், ஏப்ரல் 18, 2012

'குண்டு'க்கு விடை கொடுப்போம்! கேரள வழியில் செல்லுமா தமிழகம்?


மிழக மக்களைக் கொலவெறிக்கு ஆளாக்கி​யிருக்கும் மின்சாரத் தடங்கலுக்கு, எளிய தீர்வு இருப்​பதாகச் சொல்கிறார், கோ.சுந்தர்ராஜன். இவர், 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர். 
''குண்டு பல்புகள் மிக அதிகமான மின்சாரத்தை உறிஞ்சுவதை, பல ஆண்டு​களுக்கு முன்பே உலகநாடுகள் உணர்ந்து நடவடிக்கையைத் தொடங்கி விட்டன. 2010-ம் ஆண்டில் நமது அண்டை மாநிலமான கேரளா, குண்டு பல்பு​களுக்குப் பதிலாக சி.எஃப்.எல். பல்புகள் கொடுக்கத் தொடங்கியது. மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் இரண்டு குண்டு பல்புகளையும் 30 ரூபாயும் கொடுத்துவிட்டு இரண்டு சி.எஃப்.எல். பல்புகளை இலவசமாகப் பெற்றுக் கொண்டார்கள். அதனால் 1.30 கோடி சி.எஃப்.எல். பல்புகள் மாநிலம் முழுக்க மாற்றப்பட்டதும், கேரளாவின் மின் தேவையில் 300 மெகாவாட் உடனடியாகக் குறைந்தது.

300 மெகாவாட் மிச்சம் என்பது மிகப்பெரிய விஷயம். ஏனெனில் இந்த அளவுக்கு அணு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 3,000 கோடி ரூபாயும், அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 1,500 கோடி ரூபாயும் செலவாகும். ஆனால், கேரளா செலவழித்தது வெறும் 92 கோடி ரூபாய்தான்.
உலகம் முழுக்க கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்த 178 நாடுகள் இணைந்து 'கியோட்டோ’ ஒப்பந்தம் ஏற்படுத்தி இருக்கின்றன. இதன்படி எல்லா நாடுகளும் கார்பன் டை ஆக்ஸைடைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு கார்பனைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்களோ, அதை 'கார்பன் கிரெடிட்’ என்பார்கள். இதனை வளர்ந்த நாடுகள், 'கார்பன் டிரேடிங்’ என்ற பெயரில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன.

கேரள அரசு 300 மெகாவாட்டை மிச்சப்படுத்தியதால் அதற்கு சுமார் 30 லட்சம் கார்பன் கிரெடிட் கிடைத்தது. இதனை விற்பனை செய்து, கேரள அரசு சுமார் 150 கோடி ரூபாய் சம்பாதித்தது. ஆக, செலவழித்ததை விட அதிக வருமானம் பார்த்தது. இதுதவிர, சி.எஃப்.எல். பல்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, கேரள வீடுகளின் சராசரி மின் பயன்பாடு ஐந்து முதல் ஏழு யூனிட் வரை குறைந்தது. இதனால் மக்களுக்கு மின்சாரக் கட்டணம் மிச்சம், சுற்றுச்சூழலுக்கும் பிரச்னை இல்லை.

கேரளா சிறிய மாநிலம். அங்கு 1.30 கோடி குண்டு பல்புகளை மாற்றியதிலேயே 300 மெகாவாட் மிச்சமானது. தமிழ்நாட்டில், அரசாங்கக் கணக்குப்படியே 5 கோடி குண்டு பல்புகள் இருக்கின்றன. இவற்றை மொத்தமாக மாற்றினால் நமக்குக் கிட்டத்தட்ட 2,000 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இது, கூடங்குளம் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனுக்கு சமம். இதற்கு செலவழிக்கும் பணத்தை விட அதிகமாக 'கார்பன் டிரேடிங்’ மூலம் திரும்பப் பெறவும் முடியும். தமிழக அரசின் பட்ஜெட்டில் 14 லட்சம் குண்டு பல்புகளை மாற்றும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக மாற்றினால்தான் இது பலன் தரும்'' என்கிறார் சுந்தர்ராஜன்.

''ஆனால், குண்டு பல்புக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படும் சி.எஃப்.எல். பல்புகளில் உள்ளே இருக்கும் பாதரசம், மிகவும் ஆபத்தான வேதிப்பொருள் என்று சில நிபுணர்களால் சொல்லப்படுகிறதே... இந்த பல்புகள் உடைத்துக் குப்பையில் வீசும்போது பாதரசம் மண்ணில் கலந்து கடும் நச்சுப்பொருளாக மாறும் என்கிறார்கள். அதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக புதிய ஆபத்தைக் கொண்டு வரலாமா?'' என்று கேட்டோம்.

'’சி.எஃப்.எல். பல்புகளில் பாதரசம் இருப்பதும், அது சுற்றுச்சூழலுக்கு ஊறு உண்டாக்கலாம் என்பதும் உண்மைதான். அதனால் நாங்கள் எல்.ஈ.டி. பல்புகளைப் பயன்படுத்தச் சொல்கிறோம். 60 வாட்ஸ் குண்டு பல்பில் கிடைக்கும் வெளிச்சத்தை 15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்பில் பெறலாம் என்றால், இதே அளவு வெளிச்சத்தை 7 வாட்ஸ் எல்.ஈ.டி. பல்பிலேயே பெற முடியும். இதன் ஆயுட்காலமும் அதிகம். தற்போது ஏழு வாட்ஸ் எல்.ஈ.டி. பல்பின் சந்தை விலை சுமார் 200 ரூபாய். இதற்கான வரியை நீக்கினால் விலை இன்னும் குறையும்.'' என்று சொல்லும் சுந்தர்ராஜன், ''உற்பத்திக்கும், பயன்படுத்தும் இடத்துக்கும் இடையில் 32 சதவிகிதம் மின்சார இழப்பு ஏற்படுகிறது. பல மின்னணுப் பொருட்கள் அதிக மின்சாரத்தை உறிஞ்சுகின்றன. உதாரணமாக, இந்தியாவின் மின்சாரத் தேவையில் விவசாய மோட்டார்கள் சுமார் 30 சதவிகிதத்தை இழுக்கின்றன. ஆனால் இந்த மோட்டார்களின் இயங்குதிறன் 45 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. இவற்றை மேம்படுத்தினாலே சுமார் 14,000 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இது ஓர் ஓட்டை வாளி என்பதால், எவ்வளவு ஊற்றினாலும் வெளியில்தான் போகும். குண்டு பல்புக்களை மாற்றும் அதேசமயம், இதுபோன்ற பிரச்னைகளையும் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் எத்தனைத் திட்டங்கள் போட்டாலும், விழலுக்கு இரைத்த நீர்தான்!'' என்கிறார்.

முதல்வரின் 2023 திட்டத்தில் இதுவும் இருந்தால் நல்லது. என்ன செய்யப்போகிறது தமிழகம்?

பாரதி தம்பி

நன்றி: ஜூனியர்விகடன், 22 - 04 - 2012

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

th

videoaudio சொன்னது…

Good find, implementation necessary.

prakasam p சொன்னது…

பூவுலகின் நண்பர்களுக்கு வாழ்த்துகள். VIGYAN ASHRAM லிருந்து கிடைத்த LED MANUAL BOOK பார்க்கவும் இதிலுள்ள படி செய்தால் LED விலையை கணிசமாக குறைக்கலாம்.
இதற்கான முயற்சியை electrician, and hoppyst செய்யலாம் www.vigyanashram.com/html/Led%20Book.pdf

கருத்துரையிடுக