ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

தண்ணீர் - ஒரு வாழ்வுரிமைத் தேவை

“நீர்இன்று அமையாது உலகு” என 2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப், பெருந்தகையும், “மாமழைப் போற்றதும் மாமழைப் போற்றுதும்” என இளங்கோவடிகளும் “வாழ உலகினில் பெய்திடாய்” என ஆண்டாளும் புராண காலங்களிலேயே நீரின் அவசியத்தை உணர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஒன்று மிகுதியாய் காணப்படும் போது அதன் அவசியம் நமக்கு எளிதில் புலப்படுவதில்லை. ஆன போதிலும் நீர் மிகுதியாய் நிரம்பி வழிந்த சூழலில் தான் மேற்கண்ட தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் நீர் வளம் குன்றிவிட்ட இன்றைய சூழலில் நம்மால் நீரின் அவசியமும், நீரின் மகத்துவமும் சரியாக உணரப்படவில்லை என்பதே நிதர்சனம்.

இன்றைய நிலை :

ஆற்றின் கரையோரங்களில் தான், நமது நாகரீகம் வளர்ந்தது எனவும், நம் நாடெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது எனவும் வராலாற்றின் வாயிலாக அறிய வருகிறோம். ஆனால் அக்கூற்றுகள் அனைத்தையும் இன்று ஏடுகளில் வெறும் எழுத்து வடிவங்களாய் மட்டுமே காண முடிகிறது. மக்கள் தொகையின் அதீத வளர்ச்சியின் காரணமாகவும், சமூகத்தின் நாகரீகப் போக்கின் காரணமாகவும், இன்று தண்ணீர் அரியதொரு பொருளாகிவிட்டது. எங்கு நோக்கிலும் வறட்சி கோரத் தாண்டவமாடுகிறது. தண்ணீரின் தேவை முன்னிலும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் தண்ணீர் வளம் வெகுவாகக் குறைந்தும் வருகிறது. பயன்பாட்டின் காரணமாகத் தண்ணீர் வளம் குறைந்து வருகிற போதிலும் ஒரு சாராரால் திட்டமிட்டுத் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது. தமிகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துள்ளது என மத்திய நிலத்தடி நீர்; ஆணையம் கூறியுள்ளது. சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்னதாக, வெளியூர் சென்று ஊர் திரும்பும் யாரேனும் ஒரு கையில் பெட்டியுடனும் மறு கையில் தண்ணீர் புட்டியுடனும் வந்தால் அச்செயல் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்று அதே செயல், மிகுந்த அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. உலகில் மிக அதிகமாக மழை பொழியும் இடமான சிரபுஞ்சியில் கூட இன்று வருடத்தில் பாதி நாள் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.


உலகமயமாக்கலின் தாக்கம் :

இன்றைய தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்கு வானம் பொய்த்துவிட்டது. பருவமழை தவறவிட்டது. ஆறுகள் வறண்டுவிட்டன எனக் கூறி நமக்கு ஏதும் சம்பந்தமில்லாமல் அனைத்தும் நடந்துவிட்டதைப் போல நாம் இயற்கையின் மீது முழுவதுமாகப் பழிசுமத்தி விட்டு எளிதாகத் தப்பித்துக் கொள்கிறோம். ஆனால் இத்தகைய கொடூரமான நிலைக்கும், வறட்சிக்கும் முழுபொறுப்பும் மனித சமூகத்தையேச் சாரும். இதில் இயற்கையின் மீது பழிசுமத்துவதில் எள்ளளவும் மெய்யில்லை. அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய நீர் இன்று புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலமாக தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. உலகமே பாலைவனமாக்கப்படும் சூழல் நிலவுகிறது.

தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களால் வேகமாக சுரண்டப்படுகிறது. தமிழகத்திலுள்ள 390000 ஏரி, குளங்கள் 180000 கிணறுகள் இன்று வானம் பார்த்த பூமியாக்கப்பட்டுவிட்டன. கேரளாவில் பிளாச்சிமடா, உத்தரபிரதேசத்தில் மெக்திகனி, மகாராஷ்டிராவில் வதா, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள படமாத்தூர் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான அடிதூரம் நிலத்திற்குள் தோண்டப்பட்டு கோக் நிறுவனத்துக்காக நீர்; உறிஞ்சப்படுகிறது. நாம் கண்ணெதிரிலேயே பகல்கொள்ளை நடைபெறுகிறது. நாமும் கையாலாகா நிலையில் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டும் நமது பணியை முடித்துக் கொள்கிறோம்.

நகர்மயமாக்குதலின் காரணமாக நாட்டிலுள்ள தொழில்களெல்லாம் இயந்திரமாக்கப்பட்டு தொழிற்சாலைகள் மிகுதியாக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாய் தற்போது முன்னிலும் மிகுதியாக நீரின் தேவை அதிகரித்து வருகிறது. இயற்கையின் கொடையான நீர்; இங்கு பொருளாதார அரசியல் காரணிகளில் மேம்பாடு உடையவர்களுக்கு மட்டுமானதாக்கப்பட்டு வருகிறது. சூயஸ், விவாண்டி, தேம்ஸ், பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் இங்கே தண்ணீர் விற்பனையில் முற்றுரிமையாளர்களாகக் கோலோச்சி வருகின்றனர். இங்கே விளை நிலங்களும், நீராதார பகுதிகளும், வீட்டடி மனைகளாக, அயலகத் தொழிற்சாலைகளாக, தனியார் கட்டிடங்களாக, வணிக வளாகங்களாக உருமாற்றம் பெற்று வருகின்றன. திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட புதிய பேருந்து நிலையங்களும், அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்ய வேண்டிய இடமான மதுரை உயர்நீதிமன்ற கிளை கட்டிடமும் குளம் இருந்த பகுதியில் தான் கட்டப்பட்டுள்ளது.


தண்ணீர் பணம் கொழிக்கும் தொழிலாகவும், இலாபகரமான பண்டமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. சட்டீஸ்கர் மாநிலத்தில் “சியோநாத”; எனும் நதி, சில ஆண்டுகளுக்கு முன் 20 ஆண்டுகால குத்தகைக்கு ரேடியஸ் வாட்டர் லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்க்கப்பட்டது. திருப்பூர், டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் குடிநீர்த் திட்டம் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1994ஆம் ஆண்டில் தான் பாட்டில் நீர்; பரவலாக்கம் இங்கு துவங்கப்பட்டது. அதன் பின்புதான் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான அளவு தண்ணீரை, மிகக் குறைந்த செலவில் மிகுதியாக ஈட்டிக் கொள்கின்றனர். இங்கே நீர் எளியவர்களிடமிருந்து திட்டமிட்டு சட்டப்பூர்வமாக அபகரிப்பு செய்யப்படுகிறது. தாராளமயம் எனும் பெயரில் இங்கே சுற்றுச்சூழல் மிகுதியாக சீர்கேட்டிற்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாலின் விலையைக் காட்டிலும் தண்ணீரின் விலை இங்கே அதிகம.; அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு ஒப்பான செயல் :

தெரிந்தோ, தெரியாமலோ சூழலைச் சீர்கேடுகளுக்குள்ளாக்குவதின் மூலமாக நமக்கு நாமே எதிரிகளாகி வருகிறோம். வரலாற்று ஏடுகளின் வாயிலாக அப்போதைய மன்னர்கள் ஊர் தோறும் குளம் வெட்டினார்கள். சாலையோரங்களில் மரம் நட்டார்கள் என்பதைப் படிக்கும் போது அதன் பின்னனி, அதன் தேவை குறித்து ஆராய்ந்திடாமல் அந்நிகழ்வைக் கேலிக்குள்ளாக்குகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் நாட்டில் நீர் பற்றாக்குறையின்மைக்கு மேற்படி நிகழ்வுகளே அடி நாதங்களாக விளங்கியுள்ளன என்பதை நாம் உணரத் தவறுகிறோம். நம் முந்தைய தலைமுறையினர் தங்கள் எதிர்காலச் சந்ததியினர்களின் வாழ்க்கை குறித்து அக்கறை கொண்டதால்தான், நாம் போதுமான அளவில் இயற்கை வளங்களை நுகர்ந்து வருகிறோம்.

நாம் மலைகளையும், நிலங்களையும் போட்டி போட்டுக் கொண்டு அழித்து வருகிறோம். இயற்கையின் பெருங்கொடையான நீருக்கு மாற்றோ, நெருங்;கிய பதிலியோ வேறு எதுவும் இங்கு இல்லை என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது. மனிதன் உயிர் வாழ்ந்திட அடிப்படை தேவைகளான நிலம், நீர், காற்று போன்றவற்றை நாம் பல்வேறு வழிகளில் மாசுபடுத்துவதின் காரணமாக புவியை தொடர்ந்து வெப்பமுறச் செய்து வருகிறோம். இச்செயல் மனிதகுலம் தனக்குத்தானே தவணை முறையில் செய்து கொள்ளும் தற்கொலையே ஆகும்.

நீர் குறித்து சட்டங்கள் :

“தண்ணீர் பொதுச் சொத்து, சாதி, மத, பொருளாதார, இனப்பாகுபாடு காட்டாமல் அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது”. இருக்கிற நீர் ஆதார மூல வளங்களை சரியாகப் பயன்படுத்திட வேண்டுமென்பது ஒவ்வொரு குடிமக்களின்; கடமையாகும என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. “ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைத்தரம் உயரவும் அவனது குடும்பத்தின் சுகாதாரமான வாழ்க்கைத்தரம் மேம்படவும் அடிப்படையான ஒரே தேவை என்பது சுத்தமான தண்ணீர் ஆகும். சுத்தமான தண்ணீரை பெறுவது உலகெங்கும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும்” என அகில உலக மனித உரிமைகள் பிரகடனம், 1948 இன் விதி 25இல் கூறப்பட்டுள்ளது. ஐ.நாவின் “குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை” 1989 இன் 24வது விதியில் “ஆரோக்கியத்திற்கான உரிமை” எனும் தலைப்பிற்குள் “ஒவ்வொரு குழந்தையும் அதிகபட்ச ஆரோக்கியமான உடல்நலத்தை அனுபவித்திட உரிமை உண்டு என்றும் அதிகபட்ச ஆரோக்கியமான உடல்நலம் என்பது சத்தான உணவையும், தூய்மையான குடிநீரையும் உள்ளடக்கியது என்றும் கூறுகிறது.

ஊட்டச்சத்துக் குறைவையும், நோய்களையும் எதிர்;த்திட போதுமான சத்தான உணவையும், தூய்மையான குடிநீரையும் வழங்கிட அந்தந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் சத்தான உணவு, சுத்தமான குடிநீர் ஆகியவற்றின் அவசியத்தையும் குறித்த அடிப்படையான அறிவை அனைத்து தரப்பினருக்கும் வழங்கிட வேண்டியது கடமை” என்று கூறப்பட்டள்ளது. ஐ.நா.வின். “பெண்களுக்கெதிரான அனைத்து வகை பாகுபாடுகளையும் அகற்றுவுதன் மீதான உடன்படிக்கை” 1979இன் விதி 14 உட்பிரிவு (2)இ (4) இல் “கிராமப்புற பெண்களுக்கு போதுமான வாழ்க்கைச் சூழலை, முக்கியமாக வீட்டுவசதி, சுகாதாரம், மின்வசதி மற்றும் நீர்வசதி சம்பந்தமானவற்றை அனுபவிப்பதற்காக உரிமை உள்ளது” என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலகின் அனைத்து இயற்கை ஆதாரங்களின் மீதும் அரசு சட்டரீதியான கடமை கொண்ட பொறுப்பாட்சி பெற்றதாகும். நீர், நிலம், காற்று மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதுகாத்து மக்களின் உபயோகத்திற்கு அளிக்கின்ற கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு. தண்ணீர் நமது வாழ்வுரிமை. இந்த அரிய வாழ்வாதாரங்களை எந்தவொரு தன்னாட்சி நிறுவனத்திற்கோ, தனியாருக்கோ தனியுடமையாக்கிடவோ மாற்றிடவோ முடியாது. மாற்றிடவும் கூடாது” என முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியிருக்கிறார். தண்ணீர்; சட்டம், 1974 மற்றும் தண்ணீர் தொடர்பான இதர சுற்றுச் சூழல் மேம்பாட்டுச் சட்டங்கள் பல, “தண்ணீர் குறித்தும், அது அனைவருக்கும் சமமானதேயன்றி, எவருக்கும் தனிப்பட்ட உடமையோ, உரிமையோ அல்ல” என்பதை தெளிவாக விளக்குகிறது. நமது அரசானது மக்கள் நல அரசாகும். மக்கள் நலனைப் பேணக் கூடிய அரசானது மக்களுக்கு அடிப்படையான இன்றியமையாத் தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டியது அவசியம்.

நீர் மாசுபாடு :

உலக அளவில் காணப்படும் தண்ணீரில் மூன்று விழுக்காடு மட்டுமே பயன்படுத்தக் கூடிய அளவில் உள்ளது. அதிலும் முழுமையாக இரண்டு விழுக்காடு உறைந்து பனிக்கட்டியாக இருப்பதன் காரணமாக ஒரே ஒரு விடுக்காடு மட்டுமே இன்று நமக்குப் பயனாகி வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.

இங்கு கைக்கு எட்டக்கூடிய தூரத்திலுள்ள நீர், நம்மால் மாசுப்படுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தைச் செழிப்புறச் செய்து வந்த நொய்யல், காவேரி, பாலாறு போன்ற பெருவாரியான ஆறுகள் சாயப்பட்டறைகளின் கழிவுகள் கலக்கப்பட்டதன் காரணமாக, ஆறுகள் இருந்த சுவடுகளேத் தெரியாமல் இன்று ஊருகுலைந்து போய்விட்டன. மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக, ஊரின் மிகுதியான கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் ஆறுகளோடு இணைந்து விடப்பட்டதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே நதியான தாமிரபரணி ஆறும் மாசுப்படுத்தப்பட்டுவிட்டது. இதுபோன்ற காரணங்களால் இன்று திண்டுக்கல் மாவட்டமே நீரற்றுப் போய்விட்டது. பாலாறு பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதின் காரணமாக வேலூர், ஆம்பூர் வாணியம்பாடி, இராணிப்பேட்டை, போன்ற பகுதிகளில் இன்று மிச்சமிருக்கும் நிலத்தடி நீரும் மாசடைந்துவிட்டது. கொடைக்கானல் பகுதியில் இரசாயனத் தொழிற்சாலை காரணமாக நீர் சீர்கேடு அடைந்துவிட்டது.

1980களின் வரையிலும் கூட தமிழகத்தில் ஆறுகள் நீண்டும், அகண்டும், பரந்து விரிந்து காட்சியளித்தன. ஆனால் நகர்மயமாதல், சூழல்சீர்கேடு போன்ற எண்ணிலடங்கா காரணங்களால் இன்று கண்ணுக்குப் புலப்படும் ஆறுகள் சுருங்கிப் போய்விட்டன. வற்றாத ஜீவநதிகள் என அறியப்பட்ட கங்கை, யமுனை நதிகளும் இன்று நம்மால் பாழடிக்கப்பட்டுவிட்டன. இல்லாத நீரைக் குறித்து கவலைகொள்ளும் நாம், அதே சமயத்தில் இருக்கின்ற வளத்தை மாசுபடுத்தாமல் சிக்கனமாகப் பயன்படுத்தி சேமித்திட வேண்டியது அத்தியாவசியம். ஒரு காலத்தில் ஆறுகளுக்கு இருந்த பெயர்கள் இன்று சில மனிதர்களின் பெயர்களாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. வற்றாத ஜீவநதிகள் ஓடிய புண்ணிய தேசத்தில் நிலவிடாத பஞ்சமும், பட்டினியும்;, வறட்சியும் இன்று தலைவிரித்தாடுகின்றன. அரசுகளின் தவறான கொள்கைகள் மற்றும் அணுகுமுறையால் இருக்கின்ற நீர் ஆதாரங்களும் அழிக்கப்படுகின்றன.

விளைவுகள் :

“தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பரவும் நோயின் மூலம் எட்டு விநாடிக்கு ஒரு குழந்தை வீதம் இறந்து கொண்டிருக்கிறது” தண்ணீருக்காக உலகமெங்கம் நூறு கோடி ;பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்” என ஐ.நா. சபை தெரிவிக்கிறது. இன்றைய சூழ்நிலையில் “மூன்றாவது உலகப் போர் ஒன்று நிகழுமாயின் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்” என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிகழும் தண்ணீர் சுரண்டல் எதிர்வரும் காலத்திலும் தொடர்ந்தால் கோரமான இறப்பு, இழப்பு, புதிய நோய்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.

ஓவ்வொரு ஆண்டும் 22 இலட்சம் மக்கள் மாசடைந்த நீரால் உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனார் குழந்தைகள் உலகில் தண்ணீரின் தேவை ஒவ்வொரு இருபது ஆண்டுகளுக்கும் இருமடங்கு அதிகரித்து வருகிறது.

நாகரீகம் வளர, வளர மனித உணர்வுக்கும், உயிருக்கும், மாண்புக்கும் சமூகத்தில் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக இங்கே கிராமங்கள் விரைவாக காலியாகி நகரங்களுக்குக் குடிபெயர்தல் முறை அதிகரித்து வருகிறது. இது ஆபத்தானதும், தவிர்க்கப்பட வே;ணடியதுமான நிகழ்வாகும். எதிர்கால சமூகம் அனைத்தையும் உடையதாகயிருந்தாலும் தண்ணீரின்றி தவித்தப்டியே வாழ்க்கையைக் காலந்தள்ள வேண்டியது வரும். உலகின் அழிவைத் தண்ணீர் பஞ்சமே தீர்மானிக்கும்.

ஐ.நா.சபை உலகளாவிய அளவில் தண்ணீரின் தரம் குறித்து 122 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியா 120ஆவது இடத்தில் இருக்கிறது. ஒரு பங்கு மணல் அதைப் போன்று மூன்று மடங்கு நீரைத் தேக்கிட உதவும். ஆனால் நம் அதீத மணல் சுரண்டலின் காரணமாக நீர்வளம் குன்றி வருகிறது.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு பல புதிய புதிய தொழில் நுட்பக் கருவிகளைக் கொடுத்து, பொருட்களைத் தயாரிக்க வைத்து தேவையான பாகங்களை மட்டும் வாங்கிச் செல்கின்றன. இதன் காரணமாக பொருட்களின் மூலமான கழிவுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே தங்கிவிடுகின்றன. அந்தக் கழிவுகள் நிலத்திலும். நீரிலும் கலக்கப்பட்டு நீர் மாசுக்குள்ளாக்கப்படுகிறது.

மேற்கொள்ள வேண்டிய யுத்திகள் :

தண்ணீர் குறித்த விழிப்புணர்வு போர்க்கால அடிப்படையில் பரவலாக்கம் செய்யப்பட வேண்டிய தருணமிது. நீர் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் மக்கள் தாங்களாகவே உணர்ந்து ஏற்கும் நிலையை உருவாக்கிட வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காரணமாகக் காட்டி மனிதனின் அதீத நுகர்வு போக்குச் சூழலால் மணல் அள்ளப்படுதலும், விளைநிலங்கள், வனங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு வருவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தனைக்கும் பின்னர் இன்னமும் தண்ணீரின் மகோன்னதத்தை அரசுகளும், மக்களும் உணர்ந்ததாகவேத் தெரியவில்லை. சாலையோரங்களிலும், மலைச் சரிவுகளிலும் தரிசு நிலங்களிலும் மிகுதியாக மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

இந்தியாவின் வறட்சியான மாநிலமான இராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் இன்று இராஜேந்தர்சிங் போன்ற தன்னார்வலர்களின் திட்டமிட்ட, சரியான செயற்பாடுகளின் காரணமாக போதுமான அளவுக்குத் தண்ணீரைப் பெற்று வருகின்றார்கள்.

தண்ணீர் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வெறுமனே ஏட்டளவில் சட்டங்கள் இயற்றப்படுவதால் மட்டுமே எங்கும் சரியான தீர்வையும் இலக்கையும் அடைந்து விட முடியாது என்பதே நடைமுறை உண்மை. அதற்கு சமீபத்திய உதாரணம் தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பான சட்டமியற்றல். எந்த ஒன்றும் அது சென்றடையப் போகும் மக்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப அமைக்கப்பட்டால் தான் அதன் அடிப்படை நோக்கத்தை நோக்கிய பயணம் சிறப்பாக அமையும் அதை விடுத்து வெறுமனே ஏட்டளவில் சட்டமியற்றலின் காரணமாக மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது. இயற்றப்படும் சட்டமானது எதிர்கால நோக்குடன் நன்கு பரிசீலிக்கப்பட்டு நடைமுறைக்கு உகந்ததாக அமைந்தால் தான் அது மக்கள் பங்கேற்புடன் அதன் இலக்கை நோக்கிப் பயணிக்கும்.

குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். 20 மைக்ரான் அளவுக்கு குறைவாகத் திறன் கொண்ட பாலித்தீன்களின் உபயோகம் தவிர்க்கப்பட வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து விவாதித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தெளிவான சரியான தொலை நோக்குப் பார்வை கொண்ட விவாதங்களுடன் கூடிய மழைநீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் மேம்பாட்டு செயல், வேறுமனே ஒரு திட்டமாக மட்டும் பார்க்கப்படாமல் இன்றியமையாத் தேவையாக பார்க்க வேண்டியது அவசியம். மிகுந்த முக்கியவத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்பட்டு தண்ணீர் மேம்பாடு குறித்து முழுமையான விழிப்புணர்வு முன்னெடுத்துச் செல்லப்பட்ட வேண்டும். இல்லாத வசதிகளைக் குறித்து பேசிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, இருக்கிற வளங்களைக் கொண்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதே சிறப்பானதாக அமையும்.

நம் மூதாதையர்கள் ஆறு நிறைய நீரைப் பார்த்தார்கள். நம் பெற்றோர்கள் ஆற்றில் நீரைப் பார்த்தார்கள். நாம் நிலத்துக்கடியில் நீரைப் பார்க்கிறோம். நாளை நம் சந்ததியினர் எதில் நீரைப் பார்க்கப் போகிறார்கள் என்பது நம் கையில் தான் இருக்கிறது.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

( robertckumar@gmail.com)

நன்றி: கீற்று.காம்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிகச்சிறந்த கட்டுரை...

Bavis Froms சொன்னது…

நம் மூதாதையர்கள் ஆறு நிறைய நீரைப் பார்த்தார்கள். நம் பெற்றோர்கள் ஆற்றில் நீரைப் பார்த்தார்கள். நாம் நிலத்துக்கடியில் நீரைப் பார்க்கிறோம். நாளை நம் சந்ததியினர் எதில் நீரைப் பார்க்கப் போகிறார்கள் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
sinthikka vaikkum varigal

கருத்துரையிடுக